தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும் படி, குழந்தைகளுக்கான கட்டாயகல்வி உரிமை சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை எளியவர்களின் குழந்தைகள் படிக்கும் வகையில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அந்தவகையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் 9 ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 200 அலுவலக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில்வே துறையில், மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சமீபத்தில் விவேக் தேப்ராய் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ரயில்வே துறையின் நிர்வாகத்தில் இருந்து பள்ளி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தனியாக பிரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
இந்த பரிந்துரையில் அடிப்படையில் ரயில்வே பள்ளிகளை தற்போது முடிந்த கல்வி ஆண்டுடன் மூட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. தற்போது ரயில்வே பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் வேறு பள்ளியில் சேருமாறு தெரிவிக்கப்பட்டது. அதே போல் ரயில்வே பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகளில் பணிமாற்றம் செய்யப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் அறிக்கை வெளியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கும் ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவுக்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பள்ளிகளை மூட அனுமதிக்க கூடாது என்று குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்ட ஆணையத்தில் முறையிட்டனர்.
இதனை விசாரித்த சட்ட ஆணையம் தென்னக ரயில்வே அறிவித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், மேற்கண்ட 9 பள்ளிகளை மீண்டும் திறக்கவும் உத்தரவிட்டது. கல்வி உரிமை சட்ட ஆணையத்தின் இந்த உத்தரவு ரயில்வே பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றொரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக