புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. சிறைச்சாலையில் இருந்து படித்து தேர்வு எழுதிய 186 பேரில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோல்வி அடைந்தவர்கள் 4417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம். பள்ளி கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹெல்ப் லைன்’ மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தகுந்த அறிவுரை வழங்கப்படும். அவர்கள் ஜூன் 28-ந் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 அல்லது வேறு படிப்புகளுக்கு உடனே செல்ல முடியும். எனவே தோல்வியுற்ற மாணவர்கள் சோர்வடைய வேண்டாம். அடுத்ததாக வெற்றிபெறும் ஆலோசனைகளையும் தலைமை ஆசிரியர் வழங்குவார்.
சில பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என அந்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் விளம்பரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேல் பிளஸ்-1 வகுப்பில் 600 மதிப்பெண்ணும், பிளஸ்-2 வகுப்பில் 600 மதிப்பெண்ணும் சேர்த்து தான் 1,200 மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைத்திருக்கிறோம்.
ஒரு மாணவர் கூட இல்லாத 29 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து பார்க்கும்போது, 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. என்றாலும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும். அதுபோன்ற பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களுடன் இணைந்து ஆசிரியர்களும் செயல்படுவார்கள்.
கூடுதல் மாணவர்களை சேர்க்க கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று, மாணவர்கள், பெற்றோரை சந்தித்து, தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள், புதிய பாடத்திட்டங்கள் பற்றி பேசி வருகின்றனர். செப்டம்பர் வரை இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் மூலம் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் ஊர்வலமாகவும், முரசு கொட்டியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். செப்டம்பரில் மாணவர் சேர்க்கை குறைந்து இருந்தால் அதுபற்றி அரசு பரிசீலிக்கும்.
புதிய பாடத்திட்டம் வெளியிட்டபோது காணப்பட்ட ஒரு சில பிழைகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் புத்தகங்களை வழங்கும்போது எந்த பிழையும் இருக்காது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கிறது.
2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் 93 ஆயிரம் பேர். 2014, 2017-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசு பரிசீலிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்பது பற்றி துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பலர் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுவதாக கூறப்படும் கருத்தின் அடிப்படையில் அந்த பாடத்திட்டத்தில் பலர் சேர்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்காது.
அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். பயிற்சி பெற்ற ஆயிரம் மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளை நாடும் நிலை உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக