10½ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (31.05.2013) வெளியாகிறது
10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பள்ளி படிப்பின் முக்கியத்துவம்
மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.
அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
10½ லட்சம் மாணவர்கள்
இந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி, 27–ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.
மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நாளை காலை வெளியாகிறது
அதன்படி, பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 9–ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12–ம் வகுப்பு தேர்வு முடிவு 27–ந் தேதி வெளியானது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.
இணையதளத்தில் பார்க்கலாம்
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நொடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
இலவசமாக அறிந்துகொள்ள ஏற்பாடு
பிளஸ்–2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் அதேபோல் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக