ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஏழைகள், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஒதுக்கீடு தொடர்பாக பெற்றோர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளிடமும் இந்த விண்ணப்பங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
எனவே, இந்த இடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மாணவர் சேர்க்கைக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 25 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.
இந்த விண்ணப்பத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக