லேபிள்கள்

26.1.14

சுதந்திரம் - குடியரசு: என்ன வேறுபாடு

நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை அடிமைப்படுத்தி, மக்களின் உரிமைகளை ஒடுக்கி, இயற்கை வளங்களை கொள்ளையடித்து ஒற்றுமையாக இருந்த மக்களையும் பிரித்து விட்டு, 1947 ஆக., 15ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர் நமக்குவழங்கியது தான் சுதந்திரம். சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரக்கணக்கான மக்களின் ஓய்வில்லா போராட்டம் ஒளிந்திருக்கிறது. பல தலைவர்கள், இன்னுயிரை வருத்தி பல ஆண்டுகளாக ஆங்கிலேயரின் பீரங்கிகளை எதிர்த்து நின்று போராடி, அடிமை தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்கினார்கள். இதனை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.நமக்கு அப்போது கிடைத்த சுதந்தரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன்பின், இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல்,இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலரத் தொடங்கியது. பிரிட்டிஷார் நியமித்த கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இவ்வாறு மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது.குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில் குடியரசு தலைவர் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம், குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
அடேங்கப்பா! அரசியல் சாசனம்:



அரசியல் சாசனம் என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள்மற்றும் நெறிமுறைகளைவிளக்கிப் பட்டியலிடும் ஆவணம். இந்திய சுதந்திரத்திற்குப் பின், குடியரசு நாடாக இந்தியாவை பிரகடனப்படுத்த, அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான, அரசியல்நிர்ணய சபை மேற்கொண்டது.இதன்படி, 1947, ஆக., 29ல், சட்ட வரைவுக்குழு உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அம்பேத்கர் தலைமையிலான7 பேர் கொண்ட குழு,2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் அயராத உழைப்பில், இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின், 1949, நவ., 26ல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்குவந்தது. இந்த நாள் தான்குடியரசு தினம். இந்தியஅரசியல் சாசனத்தில் மொத்தம் 22 பகுதிகள், 448 ஷரத்துகள், 12 அட்டவணைகள்,98 திருத்தங்கள், 1 லட்சத்து17 ஆயிரத்து 369 சொற்கள்உள்ளன.
அந்த மூன்று வார்த்தைகள்:



இந்திய அரசியல் சாசனத்திற்கு முகவுரை வழங்கியவர், ஜவஹர்லால் நேரு. இதுஅரசியல் சாசனத்தின் நோக்கங்களை, தெளிவாக விளக்குகிறது. முகவுரை "இந்தியஅரசியலமைப்பின் திறவுகோல்' மற்றும் "அரசியலமைப்பின் இதயம்' எனபோற்றப்படுகிறது. முகவுரை இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமேதிருத்தப்பட்டது. 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, "சமதர்மம்',"மதச்சார்பின்மை', "ஒருமைப்பாடு' என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
தேசிய கீதம் - சில சுவாரஸ்யங்கள்:



121 கோடி இந்திய மக்களின் தேசிய கீதம், ''ஜன கன மன' பாடல். ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இந்தப் பாடல், முதன்முதலில் 1911 டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.தற்போது நூற்றாண்டுகளை கடந்து அனைவரதுஉணர்விலும் கலந்துள்ளது.இப்பாடல் 1950 ஜன.24ல் தேசிய கீதமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம், வங்க மொழியில் 'பாரத விதாதா', ஆங்கிலத்தில் 'தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என அழைக்கப்படுகிறது.இந்தியத் தாயைவாழ்த்துவது போல இப்பாடல் அமைந்திருக்கும்.
ரவீந்திரநாத் தாகூர், இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவர். இவரே இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், வங்கதேசத்துக்கான தேசிய கீதத்தையும் இயற்றினார்.இருநாட்டுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை, தாகூரைமட்டுமே சேரும். தேசியகீதம் இசைக்கப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பெற்ற தாய்க்கு
கொடுக்கப்படும் மரியாதை,தேசிய கீதத்தை பாடும் போது இந்தியத் தாய்க்கு கொடுக்கப்படுகிறது.
முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது:



ராஷ்டிரபதி பவனில் உள்ள டர்பர் ஹாலில், 1950 ஜன., 26ம் தேதி காலை 10:18 மணிக்குஇந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார். இவ்விழாவின் போது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குஅறிவித்தார்; தேசியக்கொடியையும் பறக்கவிட்டார். பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார். முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் (தற்போதுபோன்று எவ்வித பாதுகாப்பும் இன்றி) இர்வின் மைதானத்துக்கு சென்றார். வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. மக்கள் 'ஜெய்' என கோஷமிட்டனர். பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.முதல் 4 குடியரசு தின (ராணுவ அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள்) நிகழ்ச்சிகள் வவெ?வேறு இடங்களில் (1950ல் இர்வின் மைதானம், 1951ல் கிங்ஸ்வாய், 1952ல் செங்கோட்டை, 1953ல் ராம்லீலா மைதானம்) நடந்தது. இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.
யார் அதிகம் :



அதிக முறை, குடியரசு தின விழாவில்பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமையை ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
யார் குறைவு:



நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
ஜன.,26 ஏன்?




1930, ஜன., 26ல், லாகூரில் நடைபெற்றஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்,
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் நினைவாகவே, ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது.

சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள்
*
அம்பேத்கர்
*
கோபால்சாமி ஐயங்கார்
*
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
*
கே.எம்.முன்ஷி
*
சையது முகமது சாதுல்லா
*
மாதவராவ்
*
டி.பி.கைதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக