லேபிள்கள்

10.7.14

அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்காண்டு சரிகிறது: ஷாக் ரிப்போர்ட்

விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டம் என்ற அந்தஸ்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக விட்டு கொடுத்து விட்டு ஒதுங்கி வருகிறது. இழந்த முதலிடத்தை திரும்ப பெற்று விட வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிந்து வருகிறது.


மாவட்டத்தில் 598 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 344 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், 14 ஆதிதிராவிட நலத்துறை துவக்கப்பள்ளிகள், 13 நகராட்சி துவக்கப்பள்ளிகள், 9 துவக்கப்பள்ளிகள் என மொத்தம் 978 துவக்கப்பள்ளிகள் உள்ளன. 149 ஊராட்சி நடுநிலைப்பள்ளிகள், 62 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், 2 ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி என மொத்தம் 214 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.


மாவட்டத்தில் 2007ம் ஆண்டு அரசின் துவக்க பள்ளிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 651 மாணவ, மாணவியர் கல்வி கற்றனர். ஆனால் 2014ல் 46 ஆயிரத்து 603 மாணவ, மாணவியர் மட்டும் கல்வி கற்று வருகின்றனர். 2007ம் ஆண்டை 2014ல் ஒப்பிடுகையில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. நடுநிலை பள்ளிகளில் 2007ம் ஆண்டில் 25 ஆயிரத்து 623 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். 2014ல் 22 ஆயிரத்து 354 ஆக குறைந்துள்ளது.

மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டிய நிலையில் துவக்க பள்ளிகளில் பயின்ற 71 சதவீத மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 23 சதவீத மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி சென்று விட்டனர். இதே விகிதாச்சார தேய்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளில் 1 மற்றும் 6 வகுப்புகளில் ஆங்கில மொழிப்பிரிவை துவங்கியது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழிப்பிரிவு துவங்கியும் மாணவர்கள் சேர்க்கை எதிர்ப்பார்த்த அளவில் இல்லை.


இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யத்தில்தான் இருக்கும். இதனை மேம்படுத்த அரசு பள்ளிகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த அரசும், ஆசிரியர்களும் பாடுபடவேண்டும். செய்ய தவறும் பட்சத்தில் வரும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு பள்ளிகளும் இருக்காது. ஆசிரியர்கள் பணியிடமும் இருக்காது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக