ஜூலை.9-ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வுஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.
3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.
ஆசிரியர் பணிக்கு தேர்வுபின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன.
இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக