விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட தொடக்ககல்வி அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் அரசு துவக்கப்பள்ளிகள் 9, அரசு நடுநிலைப்பள்ளி 1, நகராட்சி துவக்கப்பள்ளிகள் 13, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் 15, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் 598, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 149, அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகள் 344, அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் 62, ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளிகள் 14, ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளிகள் 2 என 1,207 பள்ளிகள் உள்ளன.
துவக்கப்பள்ளிகளில் 46,603 மாணவர்களும், நடுநிலைப்பள்ளியில் 22,354 மாணவர்களும் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. கல்வித்தரம், அடிப்படை வசதிகளும் கிடையாது என்ற காரணங்களினால், ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஒரு சில தனியார் பள்ளிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் தங்களது பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வி சரியாக கிடைக்காது என்ற நினைப்பில் பெற்றோர்கள் அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால் அரசு பள்ளிகள் காட்சிப்பொருளாகவே மாறிவருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது துவக்கப்பள்ளிகள்தான்.
2007ம் ஆண்டு கணக்குப்படி துவக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் 651 மாணவர்கள் படித்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது 46,603 பேர் மட்டுமே படிக்கின்றனர். இதுபோல் நடுநிலைப்பள்ளிகளில் 25,623 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போது 22,354 பேர் மட்டுமே படிக்கின்றனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளில் துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 ஆக குறைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பல்வேறு இலவச நலத்திட்டங்களை மாணவர்களுக்கு அளித்தாலும் ஆண்டுதோறும் எண்ணிக்கை குறைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
அனைவருக்கும் கல்விதிட்டம்(எஸ்எஸ்ஏ) மூலம் மாணவர்களின் சேர்க்கைக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமித்து, துவக்கம் முதலே தரமான ஆங்கிலவழிக்கல்வி போதித்தால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை தடுக்கலாம்.
அரசு ஊழியர்கள் தங்களின் பிள்ளைகளில் ஒருவரையாவது இப்பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அதற்கு அரசு வழிகாட்ட வேண்டும். இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகும். இதுபோன்ற நிலைமைதான் நடுநிலைப்பள்ளிக்கும் ஏற்படும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக