லேபிள்கள்

10.5.15

பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், அரசுப் பள்ளிகள் தான் காரணம் என்பது தெரியவந்தது.

குறிப்பாக வணிகவியல் பாடத்தில் 92.92 சதவீதம், பொருளியல் பாடத்தில் 97.71, வரலாறு பாடத்தில் 94 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மூன்று பாடங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்திருப்பது தெரியவந்ததுஇதையடுத்து, தேர்ச்சி சதவீதம் குறைந்த அதாவது 80-க்கும் குறைவான தேர்ச்சி சதவீதம் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்ததாவது:வணிகவியல், பொருளியல், வரலாறு ஆகிய 3 பாடங்களில் தான் அதிகளவில் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இதனால் மாநில அளவில் முதலிடம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தோல்வி அடைந்துள்ள மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படும். 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக