லேபிள்கள்

10.5.15

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்

பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.அதன் விவரம்:- அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், குறும்படங்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தவேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்து பெற்றோர்களுக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.போக்குவரத்து காவல்துறையால் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டால், இது தொடர்பாக மாணவரை பள்ளி நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதாகத் தகவல் பெற்றால்,அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.பேருந்து படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து, அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவசப் பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.பேருந்து தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இது போன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்தசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக