லேபிள்கள்

13.5.15

உடுமலை கல்வி மாவட்டம் அமைய எதிர்பார்ப்பு! நிர்வாக சிக்கலைசந்திக்கும் கல்வித்துறை

                         திருப்பூர் மாவட்டம் உருவாகி, ஏழு ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரம் வருவாய் கோட்டங்களுக்கான கல்வி மாவட்டம், இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை, கல்வித்துறையினர் சந்தித்து வருகின்றனர்.
உடுமலை வருவாய் கோட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில், 40 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 234 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 21 தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளிகள் உள்ளன.பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இன்னமும் ஒரே ஒரு கல்வி மாவட்டம் மட்டுமே உள்ளது. உடுமலையை தலைமையிடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.திருப்பூர் மாவட்டம் உதயமாகி, ஏழு ஆண்டுகளை கடந்தும் கூட, கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி தேர்ச்சி விகிதம்சமர்ப்பிப்பது, ஆசிரியர்களுக்கான கூட்டம், அலுவலக பதிவேடு சரிபார்ப்பு போன்ற அனைத்து பணிகளுக்கும், ஆசிரியர்களும், மாணவர்களும் திருப்பூருக்குச் செல்ல வேண்டியுள்ளது. தவிர, பள்ளிகளுக்கு கல்வித்துறையால் அனுப்பப்படும் தகவல்களை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது வெளியான பிளஸ் 2 முடிவுகளில், உடுமலை, 90 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. மேல்நிலை வகுப்புகள், முதன்மை கல்வித்துறைகட்டுப்பாட்டில் இருப்பதால், தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு வரை, பள்ளிகளின் கல்வித்தரம், மாவட்ட கல்வித்துறையால் கவனிக்கப்படுகிறது.மாவட்ட கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டை, உடுமலை உள்ளிட்ட பல பகுதி பள்ளிகள் இழந்து வருகின்றன.இதனால், பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய பல்வேறுதிட்டங்கள், போதிய ஆய்வு இல்லாமல், முடங்கியே கிடக்கின்றன. இதன் காரணமாக, தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை, பாதிக்கப்படுகின்றன. கல்வித்துறை முழுமையாக ஆய்வு செய்து, உடுமலை கல்வி மாவட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது மட்டுமே, இதற்கு தீர்வாக இருக்கும்.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கல்வித்துறை சார்ந்த பணிகளுக்கு திருப்பூர் செல்ல வேண்டிய நிலையால், ஆசிரியர்களின் பள்ளி பணி பாதிக்கப்படுகிறது. மனஉளைச்சல் ஏற்படுகிறது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளபள்ளிகளில், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் தடைபடுகிறது.கல்வி மாவட்டமாக அமைப்பதற்கான அனைத்து தகுதிகளையும் உடுமலை பெற்றுள்ள போதும், இத்திட்டம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவுமே இல்லாமல் இருப்பதால், கல்வித்தரம் சரிவடைய வாய்ப்புள்ளது. வரும் கல்வியாண்டிலாவது, உடுமலை கல்வி மாவட்டம் அமைய, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக