லேபிள்கள்

11.5.15

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உயர்மட்டக்குழு
ஐகோர்ட்டு உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு போக்குவரத்துத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஆகிய துறைகள் இணைந்து செயல்படும் பொருட்டு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

உயர்மட்டக்குழு அளித்துள்ள பரிந்துரையில் பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:–

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பஸ் படிக்கட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வழித்தடங்களில் வரும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
அனைத்து பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துக்கள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து துறையால் வழங்கப்படும் துண்டுபிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மூலம் விபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்–ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களை பங்கேற்க செய்து பெற்றோருக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும். படிக்கட்டு பயணம் தவிர்த்தல், அதனால் ஏற்படும் விளைவுகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும்.

பஸ் படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளை பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

இலவச பஸ் பயண அட்டை
பஸ்களில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்களை போக்குவரத்து காவல்துறையால் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டு பள்ளிகளுக்கு தெரிவிக்கும் போது அந்த பள்ளி நிர்வாகம் மாணவரை எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும் அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதை கண்டறிந்து தகவல் பெறப்படும்போது, அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பல எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இதுபோன்ற தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ் பயண அட்டை திரும்ப பெறப்படும் என்பதையும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தெரிவித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

உயர்மட்டக்குழுவின் பரிந்துரையில், பஸ் தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை
இந்த சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். பின்னர், அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக