அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள இளநிலை பொறியியல் படிப்பு இடங்களில் பிற மாநிலத்தவர் சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ள வெளி மாநிலத்தவர்கள் இணைய வழியில் பதிவு செய்ய ஜூலை 6 கடைசித் தேதியாகும். பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க ஜூலை 9 கடைசித் தேதியாகும்.
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 28-ஆம் தேதி தொடங்குகிறது.
பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள இடங்களில் வெளி மாநிலத்தவர்களுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், பி.இ, பி.டெக். படிப்புகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 11 இடங்கள், கிழக்குப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 11 இடங்கள், மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 11 இடங்கள் தென் பகுதியிலுள்ள பிற மாநிலத்தவர்களுக்கு 16 இடங்கள், புலம்பெயர்ந்த காஷ்மீர் மாநிலத்தவருக்கு ஓர் இடம் என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பில் ஒட்டுமொத்தமாக 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்கள் www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விருப்பமுள்ள பிற மாநிலத்தவர்கள் முதலில் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய ஜூலை 6 கடைசித் தேதியாகும்.
இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ் நகல்கள், பதிவுக் கட்டணமாக ரூ. 500-க்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, "இயக்குநர் (சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600 025' முகவரிக்கு ஜூலை 9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக