லேபிள்கள்

22.6.15

குறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் முறையிட மாணவர்கள் முடிவு

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளிகள் ஒதுக்கி வருவதால் அவர்கள் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். வசதியுள்ள மாணவர்கள் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர்.

      அங்கு அவர்களின் கல்வித்தரம் குறைவாக இருந்தாலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி அடைய வைத்து விடுவதுண்டு. அங்கு இடம் கிடைக்காதவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடம் கேட்டு நகர்வதுண்டு.
 
      நடந்து முடிந்த 10 மற்றும் 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்களுக்கு அதிகளவு மதிப்பெண்களை ஆசிரியர்கள் அள்ளி வழங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதன் காரணமாக 10–ம் வகுப்பில் 480–க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு மட்டுமே அவர்கள் விரும்பிய குரூப் கிடைக்கும். அதே பள்ளியில் படித்த மாணவர்கள் என்றால் 450–க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றாலும் கொடுத்து விடுகின்றனர். 
350 மற்றும் அதற்கு குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவ – மாணவிகளை தனியார் பள்ளிகளோ, அரசு உதவிபெறும் பள்ளிகளோ சேர்ப்பதில்லை. ஏனெனில் 12–ம் வகுப்பில் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நல்ல முறையில் காட்டவேண்டும் என்பதற்காக இதுபோல் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் திண்டுக்கல் நகரில் தற்போது அரசு பள்ளிகளிலும் இதே நிலை நிலவி வருகிறது. 
300–க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் ஒதுக்கி வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் கூறுகையில், திண்டுக்கல் நகரில் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10–ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்திற்காக அரசு பள்ளிகளிலும் சேர்க்க மறுக்கின்றனர். 
பல்வேறு சிரமங்களுக்கு இடையே பள்ளியில் வழங்கும் சத்துணவை சாப்பிட்டு படிப்பிற்காக வரும் எங்களை அரசு பள்ளியே ஒதுக்கினால் நாங்கள் எங்கே சேர முடியும். எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக