சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.இ) சேர்க்கைக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட, பதிவாளர் ஜெ.வசந்தகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, பொறியியல் புல முதல்வர் செ.வேலுசாமி, சேர்க்கை பிரிவு ஆலோசகர் தி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தரவரிசைப் பட்டியலும், விரிவான கலந்தாய்வு அட்டவணையும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தது:
ஜூன் 27, 28-ல் கலந்தாய்வு: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணையதளத்திலும் அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு, ஒருமணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் (www.annamalaiuniversity.ac.in) தெரிந்து கொள்ளலாம். மேலும் auregr000ymail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும், உதவி மைய தொலைபேசி எண்கள் 04144 238348, 238349 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக