'இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; முந்தைய ஆண்டுகளில் முடித்தவர்களை அனுமதிக்கக் கூடாது' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அக்னிஹோத்ரி வேணுகோபால் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' 'கவுன்சிலிங் நடக்கலாம்; ஆனால் ஒதுக்கீடு ஆணை வழங்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, ஐசக் மோகன்லால், ஜி.சங்கரன், கே.செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன், பழைய மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் சத்தியசந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகினர். இருதரப்பிலும் வாதங்கள் முடிந்தன.இதையடுத்து 'அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். கவுன்சிலிங்கை தொடரலாம்; வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒதுக்கீடு ஆணை வழங்கக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி தாக்கல் செய்த பதில் மனு:எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கான தகுதி விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் சட்டம் விதிகள் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான சட்டம் ஆகியவற்றை பின்பற்றி அரசு உத்தரவுப்படி இந்த தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளின்படி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதி என்ன என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 2,257 இடங்களில் 1,709 இடங்கள் 2014 - 15ம் ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 548 இடங்கள் முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கலாம்.
மொத்த இடங்களில் இது 24 சதவீதம். மூன்றாவது கவுன்சிலிங் முடிந்த பின் தான் சரியான 'கட் - ஆப்' தெரிய வரும். மாணவர்கள் சேர்க்கைக்கான வயது வரம்பு ஒவ்வொரு ஆண்டும் சரிவர பின்பற்றப்படுகிறது.
எனவே மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் 2014 - 15ம் ஆண்டில் முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல.விளக்க குறிப்பேட்டில் உள்ள நிபந்தனைகளை ஏற்று மருத்துவப் படிப்புக்கு மனுதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே அந்த நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும்.முந்தைய ஆண்டு மாணவர்கள் தற்போதைய மாணவர்களுடன் போட்டி போட சட்டத்தில் தடை இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட் - ஆப் மதிப்பெண் 194 என்பது சரியல்ல. கட் - ஆப் 197.25 என வரலாம்.மாணவர் சேர்க்கைக்கான தகுதியில் மனுதாரர்கள் திருத்தம் கோர உரிமையில்லை. இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் என கட்டுப்படுத்த முடியாது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக