மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
''யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இனி, யோகா கட்டாய பாடமாக்கப்படும். 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். இந்த பாடத்துக்கு, 100 மார்க்குகள் வழங்கப்படும். இதில், 80 மார்க், பல்வேறு ஆசனங்களை செய்வதற்கான, செய்முறை பயிற்சிக்காக வழங்கப்படும். மீதமுள்ள, 20 மார்க், கேள்வி - பதில்களுக்காக (தியரி) வழங்கப்படும். இந்த பாடம், மாணவர்களுக்கு கூடுதல் பாடச் சுமையாக இருக்காது. 'கணிதம், அறிவியல், வணிகம் போல், இது, மற்றொரு பாடமாக இருக்குமோ' என, மாணவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
மாணவர்கள் சந்தோஷமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், பள்ளியில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் யோகா போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சி மையங்களிலும், யோகா கட்டாய பாடமாக்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், யோகா பயிற்சியாளர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்படும். இதனால் தான், ஆசிரியர் பயற்சி மையங்களிலும் யோகாவை, ஒரு பாடமாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகா பாடங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், அடுத்த மாதம், 17 முதல், 'மொபைல் ஆப்' மூலமாக, 'டவுண்லோட்' செய்யலாம்.
* 'நடப்பு கல்வி ஆண்டிலேயே, மத்திய அரசு பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படுமா' என்பது குறித்து, அரசு தரப்பில் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை.
* யோகா குறித்த சில பாடப் புத்தகங்கள் நேற்று வெளியிடப்பட்டாலும், மேலும் பல புத்தகங்கள் தற்போது தான், அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
* 'நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு விட்டன. இதனால், இந்த கல்வியாண்டில் யோகா பாடம் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு' என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
*''மாநில அரசு பள்ளிகளில் யோகா பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்,'' என, அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
*இதனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
*'பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாவதால், எதிர்காலத்தில் யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
*யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும், டிசம்பரில், டில்லி, 'கன்னாட் பிளேஸ்' பகுதியில், நாடு முழுவதும் இருந்து வரும் மாணவர்களால்,'கலா உத்சவ்' என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக