லேபிள்கள்

29.5.16

5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

பள்ளிகளில் 5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்து உள்ளது.

புதுடெல்லி :
பள்ளிகளில் 5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்து உள்ளது.
புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
டெல்லி அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவராம் சர்மா, குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மங்கட் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
இந்திய கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்களை இந்த குழுவினர் ஆய்வு செய்து 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அதில் உள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என கல்வி உரிமைச்சட்டம் பரிந்துரைக்கிறது. இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து, 4-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என்ற வரைமுறையை உருவாக்க வேண்டும்.
மாணவர்களுக்கு 5-ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இதில் முதல் முறை தோல்வியடையும் மாணவன் அல்லது மாணவிக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காததை உறுதி செய்யும் வகையில் பரிகார பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வித்துறையில் நிர்வாக தரத்தை உயர்த்த கல்வி பணிநிலை சேவை அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்களின் திறன் வளர்த்தல் மற்றும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வி தரத்தை பொறுத்தவரையில் ஏராளமான இந்திய நிறுவனங்கள் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களை உரிய கட்டுப்பாடுகளுடன் இந்தியாவுக்குள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு தொடக்க நிலையில் இருந்து உயர்கல்வி வரை கல்வித்தர மேம்பாட்டுக்காக கட்டமைப்பு முதல் கல்வித் தரம் வரை பல்வேறு வடிவங்களில் முக்கிய பரிந்துரைகளை சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்து உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக