லேபிள்கள்

4.6.16

அரசு உதவி பெறும் பலபள்ளிகள், அரசிடமிருந்து உதவி பெறுவதை மறைத்து, சுயநிதிப் பள்ளிகளைப் போல சேர்க்கை : நடவடிக்கை எடுக்குமா கல்வித்துறை?

கோவையில் அரசு உதவி பெறும் பலபள்ளிகள், அரசிடமிருந்து உதவி பெறுவதை மறைத்து, சுயநிதிப் பள்ளிகளைப் போலசேர்க்கை நடத்தி வருவதாகபுகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி கண்காணிக்க உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அரசு பங்களிப்புடன், அரசு நிர்ணயித்த கட்டணம், இடஒதுக்கீடு ஆகிய வசதிகளுடன் கோவை மாவட்டத்தில் 42 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்த கல்வியாண்டில் இப்பள்ளிகள் 95.95 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்தன. சில பிரபலமான பள்ளிகள், 100சதவீத தேர்ச்சியையும், சிறப்பான இடங்களையும் பெற்றன. இதனால் மற்ற பள்ளிகளை விட அரசு உதவி பெறும் பிரபலமான பள்ளிகளில் சேர மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம், சேர்க்கைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கூட பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. மேலும் தங்கள் பள்ளியிலேயே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், இடஒதுக்கீடு, நல்ல மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும்பாலானவற்றில், அவை அரசு உதவியின் கீழ் இயங்குபவை என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உதவியில் நடத்தப்படும் பிரிவையும், சுயநிதிப் பிரிவையும் கொண்டுள்ள பல பள்ளிகள், சுயநிதிப் பிரிவை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவதால், அரசு உதவி பெறும் பிரிவில்சேர்க்கைகள் திட்டமிட்டு குறைக்கப்படுவதாக பெற்றோர் தரப்பிலும் புகார்கள் கூறப்படுகின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகள், தாங்கள் அரசு உதவியின் கீழ் செயல்படுவதை தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் சேர்க்கை நேரத்தில் இந்த உத்தரவை பள்ளிகள் மீறி வருவதாக புகார்கள் வருவதால், கண்காணிப்பைகல்வித் துறையினர் மீண்டும் தொடர வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் கூறும்போது, ‘அரசு உதவி பெறும் பள்ளிகள்அனைத்தும், தங்களது பள்ளி எந்த வகையைச் சார்ந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் சேர்க்கை நேரத்தில், இதுபோன்ற புகார்கள் வருவதால், மீண்டும் அதுகுறித்து அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, அரசு உதவியில் இயங்கும் பள்ளிகள் அதை, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும் வகையில் அறிவிக்க வேண்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக