லேபிள்கள்

22.6.16

எம்.பி.பி.எஸ்., பொது பிரிவு கலந்தாய்வு துவக்கம் : 'டாப் - 10' பிடித்தோரின் ஒரே தேர்வு எம்.எம்.சி.,

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், 'டாப் - 10' இடம் பிடித்த மாணவ, மாணவியர், எம்.எம்.சி., எனப்படும், சென்னை மருத்துவக் கல்லுாரியையே தேர்வு செய்தனர். தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், இரண்டு இ.எஸ்.ஐ., மற்றும் ஆறு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புக்கு, 1,055 இடங்களும் உள்ளன.
இதற்கு, 25 ஆயிரத்து, 379 பேர் விண்ணப்பித்த நிலையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. சிறப்பு பிரிவுகளில், 69 இடங்கள் நிரம்பிய நிலையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. 735 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

அரசு உதவி செய்யும் : தரவரிசையில், முதல் இடம் பிடித்த, கேரள மாணவி ஆதித்யா மகேஷ், ஆந்திர மாணவர் ஞானவேல் உட்பட, 10 பேரும், எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., படிப்புகளை தேர்வு செய்தனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு கடிதங்களை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பேசுகையில், ''ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 810 உயர்ந்துள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு, அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்,'' என்றார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத்துறை, நேற்று வெளியிட்டது. இதையடுத்து, அந்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை சரி செய்யப்பட்டதால், வழக்கமான தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டது. நான்கு பேரின் தரவரிசைகள் மாறின. புதிய தரவரிசைப்படி, மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆந்திர மாணவி சாய்துர்கா, தரவரிசையில், 121வது இடத்தில் இருந்தார். இவரது, மதிப்பெண் பட்டியலில்,
உயிரியல் பிரிவில், 199 மதிப்பெண் என்று இருந்தது. ஆனால், தவறுதலாக, 149 என, பதிவு செய்திருந்தார். அவரை அழைத்த மருத்துவக் கல்வி அதிகாரிகள், மதிப்பெண் சான்றை சரிபார்த்து, உயிரியல் பாடத்தில், 199 மதிப்பெண்ணை பதிவு செய்தனர். இதனால், அவரது தரவரிசை, 29வது இடத்திற்கு முன்னேறியது.

3,649 பேர் : மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''முதல் கட்ட கலந்தாய்வுக்கு, 3,649 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவில், 159 பேர் பங்கேற்றனர். மற்றவர்கள், 25ம் தேதி வரை நடக்கும் கலந்தாய்வுகளில் பங்கேற்பர்; மீதம் உள்ள இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்,'' என்றார்.

தோழிக்கு விட்டு தந்த மாணவிக்கு அதே இடம் : திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு, முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. இதை, தன்னுடன் படித்த தோழி ஜனனிக்காக விட்டுக் கொடுத்தார். இதை தொடர்ந்து, வர்ஷினி நேற்று, பொது பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். 'கட் - ஆப்' மதிப்பெண், 199 இருந்ததால், எம்.எம்.சி.,யிலேயே, வர்ஷினிக்கும் இடம் கிடைத்தது.
இது குறித்து, வர்ஷினி கூறுகையில், ''நான் விட்டு கொடுத்தாலும், எனக்கும், எம்.எம்.சி.,யிலேயே இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. நான் பெரிதாக ஏதும் செய்து விடவில்லை,'' என்றார்.
731 பேருக்கு எம்.பி.பி.எஸ்., சீட் : மருத்துவ படிப்புகளுக்கான பொது பிரிவு கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் நாளில், 732 பேர் அழைக்கப்பட்டனர்; இதில், ஒருவர் தவிர, 731 பேருக்கும் இடங்கள் கிடைத்தன. ஒருவர் தகுதி பெறவில்லை. அனைவரும், எம்.பி.பி.எஸ்., இடங்களையே தேர்வு செய்தனர்.
சென்னை மருத்துவ கல்லுாரியில், 90 சதவீத இடங்களும், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், 80 சதவீத இடங்களும் நிரம்பின. பொதுப்பிரிவின் இரண்டாம் நாள் கலந்தாய்வு, இன்று நடக்கிறது; 850 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். நாளை, பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. அடுத்த இரு நாட்கள், பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக