லேபிள்கள்

19.6.16

11ம் வகுப்பிற்கு ‘எப்ப ஸார் ஸ்கூலை திறப்பீங்க?’ அறிவிப்பு இல்லாததால் அலையும் மாணவர்கள் -தினகரன்

திருமங்கலம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்து 25 நாள்களுக்கு மேலாகியும் இன்றுவரை 11ம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கு பள்ளிகள்  திறக்கப்படவில்லை. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என முறையான அறிவிப்பு இல்லாததால் அன்றாடம் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிகளுக்கு  அலைந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது.  இதில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் ஆர்வத்துடன் மேல்நிலைப்பள்ளி முதலாமாண்டான 11ம் வகுப்பில் தங்களுக்கு பிடித்த குரூப்புகளை எடுத்து  சேர்த்து வருகின்றனர். பெருவாரியான பள்ளிகளில் 11ம் வகுப்பு அட்மிஷன் நிறைவடைந்துவிட்ட நிலையில் கடந்த 15ம் தேதி தமிழகத்தில் 11ம்  வகுப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் 11ம் வகுப்பிற்கான பாடபுத்தகங்கள் அச்சகங்களிலிருந்து அச்சடித்து வர காலதாமதமாகி வருவதால் அன்று பள்ளி திறக்கப்படவில்லை.  இதனால் கடந்த இரண்டு தினங்களாக மாணவ, மாணவியர்கள் தங்களது பள்ளிகளுக்கு வந்து எப்போது 11ம் வகுப்பு துவங்கும் என ஆவலுடன் கேட்டு  வருகின்றனர். ஒருசில பகுதிகளில் 11ம் வகுப்பினை ஆரம்பித்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் பாடப்புத்தகங்கள் இல்லாதததால் மாணவர்களுக்கு  பொதுஅறிவு உள்ளிட்ட பாடங்களை நடத்தி காலத்தினை கடத்தி வருவதாக கூறப்படுகிறது.  இதனால் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலக்கம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து திருமங்கலம் பகுதியிலுள்ள ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,” 11ம் வகுப்பிற்கு மொழிப்பாடம் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் ஒன்றுகூட  வரவில்லை. இதனால் 15ம் தேதி திறக்கப்பட வேண்டிய வகுப்புகளை இன்னும் திறக்க முடியவில்லை. தற்போது வாய்மொழி உத்தரவாக வரும் 20ம்  தேதி திங்கள்கிழமை 11ம் வகுப்புகள் பள்ளிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு வந்து  சேரவில்லை. எனவே, அன்றும் 11ம் வகுப்பு திறப்பது சந்தேகமே” என்றனர். 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து 25 தினங்களுக்கு மேலாகியும் 11ம்  வகுப்புகள் திறக்கப்படாமல் இருப்பதால் எப்போது தங்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரியாமல் 11ம் வகுப்பு மாணவர்கள் சோகத்துடன்  பள்ளிக்கு தினசரி வந்து செல்வது மட்டும் தொடர் கதையாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக