சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 105 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு 7 ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது ஒரு தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை உடனே நியமிக்கக் கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் யாரும் வராததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர். இதையடுத்து கொளத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக