லேபிள்கள்

19.6.16

ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பின் கீழ், 598 இடங்களில், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் இந்த பள்ளிகள்தான், ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறுகின்றன.
கல்வியில் சிறந்த கிராம மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, உணவு, உடை, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 
நவோதயா பள்ளிகளில், 75 சதவீதம் கிராம மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இரு பாலரும் படிக்கும் இந்த பள்ளியில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
இலவசமாக தரமான கல்வி அளிக்கும் இந்த பள்ளியில், மும்மொழி பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில், ஹிந்தி கட்டாயம். அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்திற்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்க பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத் தரப்படுகின்றன.
ஹிந்தி இருப்பதால், தமிழகத்தில், 60 ஆண்டுகளாக நவோதயா பள்ளிக்கு அனுமதி வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில், இந்த பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அனுமதி இல்லாததால், இதன் மண்டல தலைமை அலுவலகமும், ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளி துவங்க, கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஸ்ரீராம், மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளிகளை துவங்க முடியுமா என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி கற்பிக்கப்படும் நிலையில், நவோதயா பள்ளிகளுக்கும் அனுமதி அளிக்கலாம் என, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது. 
ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க, மத்திய அரசே இடம் வாங்கிக் கொள்ளும். நவோதயா பள்ளிக்கு, தமிழக அரசுதான் இடம் இலவசமாக வழங்க வேண்டும் என்பதால், சிக்கல் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக