லேபிள்கள்

10.7.16

குழந்தைநேயப் பள்ளி திட்டத்துக்கு 200 பள்ளிகள் தேர்வு

தமிழகத்தில் குழந்தைநேயப் பள்ளி திட்டத்துக்காக 200 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் ஜெ. ஷியாம் சுந்தர்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கான குழந்தைநேயப் பள்ளி குறித்த அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை நடத்திய ஷியாம் சுந்தர் தெரிவித்தது:
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சமூகக் கல்வி நிறுவனம் 3 ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகக் குழந்தைநேயப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு ஏற்கெனவே ஆசிரியர் சங்கங்களுடனான கூட்டமும், பின்னர் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட 6 மண்டங்களில் கூட்டமும் நடத்தப்பட்டது. இதன் மூலம், தமிழக அளவில் தன்னார்வத்துடன் முன் வந்த 200 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளிகளில் குழந்தைநேயப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் 40 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் குழந்தைகளை மையப்படுத்தி இருக்கும். அதாவது, கற்றல் சூழல், பள்ளிச் சூழல், ஆசிரியரின் தனித்திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். பள்ளிக்குக் குழந்தைகள் அச்சமில்லாமல் தங்களது கருத்தை எளிதாகத் தெரிவிக்கும் வகையிலும், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் ஷ்யாம் சுந்தர்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கருப்பையன், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைப் பேராசிரியர் தெ. வெற்றிச்செல்வன், நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் 8 மாவட்டங்களிலிருந்து 54 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக