லேபிள்கள்

12.7.16

ஜூலை 27 கலாமின் முதல் நினைவு நாள் : வீடுதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்

சென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஒரு லட்சம் மரங்கள் நடவும், வீடுதோறும் நுாலகம் அமைக்கும்
திட்டத்தையும், கலாம் அறக்கட்டளை துவங்க உள்ளது. இதுகுறித்து, கலாமின் பேரனும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலருமான ஷேக் சலீம் கூறியதாவது: அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள், ஜூலை, 27ம் தேதி, ராமேஸ்வரத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், அவரது கனவுகள், தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்படி, நினைவிடத்தில் மரக்கன்று நடப்படும். அவரது நினைவாக, குறைந்தது ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்படும். முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் வருவோருக்கு மரக்கன்றுகள் இலவசமாக அளிக்க உள்ளோம். அதேநாளில், பாம்பன் பாலம் முதல் நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பு வரை, 5,000 மாணவர்கள், அப்துல் கலாம் போன்று முக கவசம் அணிந்து பேரணி நடத்துகின்றனர். அவர்கள், கலாமின், 2020 தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய பதாகைகள் சுமந்திருப்பர். அப்துல் கலாமின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'வீட்டுக்கு ஒரு நுாலகம்' அமைக்கும் திட்டத்தின் கீழ், பள்ளிகள், கல்லுாரிகள், அலுவலகங்கள், வீடுகள் போன்றவற்றில் நுாலகம் அமைக்க உதவி செய்வோம். நுாலகம் அமைப்போருக்கும் இலவசமாக புத்தகங்கள் வழங்குவோம். மேலும், 'அப்துல் கலாம் லேர்னிங் கிளப்' என்ற அப்துல் கலாம் வாசிப்பு சங்கம் துவங்கப்படும். இதில், யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அவர்களில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மூலம் பள்ளிகளில் இந்த சங்கத்தை துவக்கி, மாணவர்களுக்கு, கலாமின் தொலைநோக்கு பார்வை குறித்தும், மாணவர்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக