காங்கயத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறையில் இருந்து மாணவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு மக்கள் குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
காங்கயத்தில் வார்டு வாரியாக வியாழக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 1-ஆவது வார்டு பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.
இதில், நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன், துணைத் தலைவர் சி.கந்தசாமி, நகராட்சி ஆணையர் எஸ்.சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வார்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.
இந்நிலையில், இந்த முகாமை பொது இடத்தில் நடத்தாமல், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை அப்புறப்படுத்திவிட்டு, வகுப்பறையில் நடத்தப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது: இந்தப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி வகுப்பறையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்காக, அங்கு 6-ஆம் வகுப்பு படித்து வரும் 30 மாணவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். முகாம் முடிந்த பின்னரே அந்த மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பினர்.
தனியார் பள்ளிகளோடு போட்டிபோட வேண்டிய நிலையில் உள்ள அரசுப் பள்ளிகளில், வேலை நாள்களில் விழாக்கள் நடத்துவது என்பது கற்றல் பணியைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.
கடந்த மாதம் காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்துவந்த மாணவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு குறைதீர் முகாம் நடைபெற்றது. எனவே, அதிகாரிகள் பள்ளி வேலை நாள்களில் இந்த முகாமை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றனர்.
இந்த முகாமுக்கு வந்தவர்களை நகர்மன்றத் துணைத் தலைவர் சி.கந்தசாமி வரவேற்றார். இவர், 1-ஆவது வார்டின் உறுப்பினராக இருப்பதோடு, இப்பள்ளியின் கிராம கல்விக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக