லேபிள்கள்

27.5.17

கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக, பள்ளிகளின் விடுமுறை ஜூன், 6 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 'ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 13லும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, வழக்கத்தை விட, ஒரு வாரம் முன்னதாக, ஏப்., 21லும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன், 1ல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

தமிழகம் முழுவதும் எதிர்பாராத வகையில், கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பல மாவட்டங்களில், பகலில் அனல் காற்று வீசுகிறது. வறட்சியால், தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பல பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கோடை வெயில் காரணமாக, பள்ளிகளின் விடுமுறையை நீட்டிக்கும்படி, பெற்றோர் மற்றும் மாணவர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர் சங்க பிரதிநிதிகளிடம், பள்ளிக்கல்வி அதிகாரிகள் கருத்து கேட்டனர். வானிலை அதிகாரிகளிடமும், வெயில் மற்றும் தென் மேற்கு பருவமழை நிலவரம் குறித்து, அதிகாரிகள் கேட்டறிந்தனர். 'ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் இருக்கும்' என, வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதையடுத்து, பள்ளிகளின் கோடை விடுமுறை, ஜூன், 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன், 7ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட 
உள்ளன. இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். பள்ளிகள் திறக்கும் நாளிலேயே பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 
வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக