லேபிள்கள்

26.5.17

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை: தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள் நிலை–1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த 9–ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ளது.
2016–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், பிரிவு 34–ன்படி, மொத்த பதவிகளில், 4 சதவீதம் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், பழைய சட்டங்களை பின்பற்றி 3 சதவீத இடங்களை மட்டும் ஒதுக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1,663 ஆசிரியர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெறும் 18 இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த இடங்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, 67 இடங்கள் (4 சதவீதம்) மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும், புதிய அறிவிப்பை வெளியிடும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
கடந்த 9–ந் தேதி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் மேற்கொண்டு தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பதிலளிக்க வேண்டும்
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், ஆணையர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூன் 2–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக