லேபிள்கள்

23.5.17

பாரபட்சமாக நடத்தப்பட்ட ’நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு; சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாணவர்களிடையே பாரபட்சமாக ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.


திருச்சி, அண்ணாநகரை சேர்ந்த மாணவன் அபி சேக்முகமது. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

‘நீட்’ தேர்வு

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கடந்த 7–ந் தேதி நாடு முழுவதும் நடத்தியது. இந்த தேர்வில் நான் கலந்துகொண்டு ஆங்கில வழியில் தேர்வு எழுதினேன். அதேபோல, தமிழகத்தில் பல மாணவர்கள், இந்த தேர்வை தமிழ் மொழியில் எழுதினார்கள். இந்த தேர்வில் மாணவர்களின் திறமையை சோதிக்க ஒரேவிதமான தேர்வு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கப்படவில்லை.
ஆங்கிலத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கும் ஒரேவிதமான கேள்விகள் கேட்கப்படவில்லை. உதாரணத்துக்கு பஸ் என்ஜின் எவ்வாறு செயல்படுகிறது? என்று ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஒரு பஸ்சில் எத்தனை சக்கரங்கள் உள்ளன? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
பாரபட்சம்
ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு பாரபட்சமில்லாமல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த தேர்வு பாரபட்சத்துடன் நடந்துள்ளது.
அதே நேரம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியை, அப்படியே அந்த மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்து கேட்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்தில் பின் பற்றப்படவில்லை.
தேர்வு ரத்து
எனவே, கடந்த 7–ந் தேதி நடந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்துவிட்டு, நாடு முழுவதும் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் ஒரே விதமான கேள்விகளுடன் கொண்ட கேள்வித்தாள்களை தயாரித்து மீண்டும் தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு உத்தரவிடவேண்டும். மேலும், 7–ந் தேதி நடந்த ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு வருகிற 24–ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக