லேபிள்கள்

25.5.17

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை ஜுன் மாதம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ”நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படவில்லை. ஒரே மாதிரியான வினாக்கள், அனைத்து வினாத்தாள்களிலும் இடம்பெறவில்லை என்பதால் இதனை பொது நுழைவுத் தேர்வாக கருத முடியாது. எனவே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஒரே மாதிரியான வினாத் தாள்களோடு, மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.” என திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்கொடி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கே வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக