லேபிள்கள்

29.11.17

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


நிபுணர்கள் நியமனம் : தமிழகத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களுக்கு, கல்வி மாவட்டம் வாரியாக, உளவியல் கவுன்சிலிங் வழங்க, மூன்று உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், கூடுதலாக, ஏழு மனோதத்துவ நிபுணர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக, உளவியல் கவுன்சிலிங் வாகனங்களும் வாங்கப்பட்டன.
ஆனால், எந்த பள்ளியிலும், இந்த கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; மனோதத்துவ நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை. 

'பேஸ் புக்' : பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு, உளவியல் கவுன்சிலிங் செய்கின்றனர். இந்நிலையில், சமீப காலமாக பள்ளி மாணவ - மாணவியர், மனதளவில் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சக மாணவர்களுடன் சகஜமாக பழகுவதில்லை. ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போட்டி போடுவது, ஒழுக்க கல்வி கிடைக்காதது, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும், 'ஆன்லைன் கேம்ஸ்' என, படிப்பு நேரத்தை வீணடிப்பது என, பள்ளிகளில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
'ஆசிரியர்கள், பெற்றோர் கண்டித்தால் தற்கொலை செய்வது என, விபரீதமான முடிவுகள் எடுக்கின்றனர். எனவே, மாணவர்களை பக்குவப்படுத்தவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே, ஒருமித்த உணர்வை ஏற்படுத்தவும், கவுன்சிலிங் தேவை. 
அதனால், பள்ளிகளில் செயல்படாமல் முடங்கியுள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக