லேபிள்கள்

1.12.17

4 பேர் தற்கொலை எதிரொலி : மாணவியருக்கு, 'கவுன்சிலிங்'

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை எதிரொலியாக, வேலுார் மாவட்டத்தில், எட்டு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ - மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கத்தில், அரசு பள்ளி மாணவியர் நான்கு பேர், ஆசிரியைகள் திட்டியதால், சமீபத்தில் கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டனர். 
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்க, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மார்ஸ் கூறியதாவது: இனி, இது போன்ற சம்பவம், எந்த பள்ளியிலும் நடக்காமல் இருக்க, வேலுார் மாவட்டத்தில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ -மாணவியருக்கு, குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம், உளவியல் ரீதியான கவுன்சிலிங் அளிக்கப்பட உள்ளது.
இவர்கள், மாவட்டத்தில் பிரச்னைக்குரிய பள்ளிகளை கண்டறிந்து, அங்கு சென்று, மாணவ - மாணவியருக்கு ஆசிரியர்களால் பிரச்னையா, குடும்பத்தில் பிரச்சனையா, வேறு யார் மூலமாவது பிரச்னையா என்பதை கண்டறிந்து, அதை எப்படி எதிர்கொள்வது என, கவுன்சிலிங் அளிப்பர். விரைவில் இந்த கவுன்சிலிங் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக