லேபிள்கள்

22.11.17

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து: கல்வி அதிகாரியை பணி நீக்கம் செய்தது ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

கும்பகோணம் பள்ளிக்கூடம் தீ விபத்து சம்பவத்தில் மாவட்ட கல்வி அதிகாரியை பணிநீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரியாக பணிபுரிந்த பினாகபாணி என்பவரை தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தனக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில், பினாகபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, ‘பள்ளிக்கூடத்தை முறையாக ஆய்வு செய்யாமல், ஒரே கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஒரு பள்ளிக்கூடமும், முதல் தளத்தில் மற்றொரு பள்ளிக்கூடமும் தொடங்க மனுதாரர் கடந்த 2002-ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். மேலும், ஆவணங்களையும் இவர் சரிவர ஆய்வு செய்யவில்லை. இந்த பள்ளிக்கூடம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவலை தெரிவிக்கவில்லை. அதனால், பினாகபாணியை பணிநீக்கம் செய்தது சரிதான்’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு வக்கீல் பாத்திமாநாதன் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தீ விபத்து நடந்துள்ள சம்பவத்தில் மனுதாரருக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தீ விபத்து நடந்த பள்ளிக்கூடத்துக்கு, மனுதாரர் அங்கீகாரம் வழங்கவில்லை. இவருக்கு முன்பு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் தான் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் அனைத்தையும் 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

அதே நேரம், கல்வி பெறுவது என்பது அடிப்படை உரிமை என்றாலும் நாட்டின் சொத்துகளான குழந்தைகளுக்கு அந்த கல்வியை பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா? அவை குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதா? என்பதை கண்டறிய அரசு அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி பள்ளிக்கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக