லேபிள்கள்

21.11.17

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து பினாக பாணி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் படி, சம்பவத்திற்கு காரணமானவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், 2002-2004 வரை மாவட்ட கல்வி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்த பினாகபாணி, தீ விபத்துக்குள்ளான பள்ளியை ஆய்வு செய்ய தவறி விட்டதாக கூறி அவரை பணிநீக்கம் செய்து 2012-ல் பள்ளி கல்விதுறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும், தனக்கு பணி பயன் வழங்க வேண்டும் என கோரியும் உயர்நீதிமன்றத்தில் பினாகபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி முரளிதரன் விசாரித்தார். அப்போது, மனுதாரரை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு சார்பில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி பள்ளியை ஆய்வு செய்ய மனுதாரரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 அதிகாரிகளின் மேல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 6 பேர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை, 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருடன் பணியாற்றிய 5 பேர் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவருக்கு முன் பணியாற்றிய தலைமை கல்வி அதிகாரி தான் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதனால் இவர் மீதான நடவடிக்கை தன்னிச்சையானது. அதனால் இவரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 8 வாரங்களுக்குள் இவரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக கருதி, இவருக்கு சேர வேண்டிய பண பலனை வழங்க உத்தரவிட்டார்.


மேலும், கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்றாலும் அதில் பாதுகாப்பான முறையில் கல்வி பெறுவது அடங்கும். பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி விதிகளின்படி அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் வழங்க பெற்றுள்ளதா என அரசு திடீர் சோதனை நடத்த வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துக்களான குழுந்தைகளுக்கு பாதுகாப்பன சூழ்நிலையை வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக