லேபிள்கள்

9.4.18

மூடுவிழா! தரம் குறைந்த 200 இன்ஜி., கல்லூரிகளுக்கு... மாணவர் சேர்க்கை குறைந்ததால் நடவடிக்கை

 மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்ததால், தங்களின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. இதையடுத்து, தரம் குறைந்த, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகளை மூட, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.


AICTE,Engineering College,இன்ஜி.,கல்லூரி,மூடுவிழா


நாடு முழுவதும், 20 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் கல்லுாரிகள், புற்றீசல் போல் துவக்கப்பட்டன. இவற்றில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டபோதும், ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.


அதிர்ச்சி :


இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், வேலையில் அமர்த்தும் வகையில் தகுதி உடையவராக இல்லாதது, தொழில் நிறுவனங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. ஒவ்வொரு ஆண்டும், வேலை இல்லா இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகியபடி உள்ளது. இதனால், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, பல கல்லுாரிகள் மூடப்பட்டு வருகின்றன.



நான்கு ஆண்டுகளில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள மாணவர்களுக்கான, 'சீட்'கள் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது. இருப்பினும், எல்லா இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், அனைத்து சீட்களும் நிரம்பாத நிலை காணப்படுகிறது.


எண்ணிக்கை:


கடந்த, 2016 முதல், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அடிப்படையில், சீட்களின் எண்ணிக்கையை, ஏ.ஐ.சி.டி.இ., குறைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 75 ஆயிரம் சீட்கள் குறைந்து வருவதாக, ஏ.ஐ.சி.டி.இ., கூறியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் படிக்க தகுதியற்ற, தரம் குறைந்த, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகளை, 2018 - 19ம் கல்வியாண்டில் மூட, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் கூறியதாவது: மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதால், இந்தாண்டு, தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. எனவே, 2018 - 19ம் கல்வி ஆண்டில், 200 கல்லுாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கற்பிக்கப்படும் பாட திட்டங்களில், குறைந்த பட்சம், 50 சதவீதத்துக்கு, என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்து உள்ளது. தற்போதைய நிலைப்படி, 10 சதவீத பாட திட்டங்களுக்கு மட்டும், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது. 


80 ஆயிரம், 'சீட்'கள் குறையும்!
நாடு முழுவதும், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட உள்ளதால், 80 ஆயிரம் சீட்கள் குறைய உள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்து உள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சீட்கள் குறைவதால், நான்கு ஆண்டுகளில், கல்லுாரிகளில் உள்ள சீட்களின் எண்ணிக்கையில், 3.1 லட்சம் குறைந்து உள்ளது. கடந்த, 2015 - 16ம் கல்வியாண்டில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இளநிலை பிரிவில், 16.47 லட்சம் சீட்கள் இருந்தன. ஆனால், அந்த ஆண்டு, 8.60 லட்சம் மாணவர்களே, இப்படிப்புகளில் சேர்ந்தனர். 2016 - 17ம் கல்வியாண்டில், 15.71 லட்சம் சீட்கள் இருந்தபோதும், 7.87 லட்சம் மாணவர்களே சேர்ந்தனர்.




பிரபல கல்வி மையங்களில் குவியும் மாணவர்கள் :
நாடு முழுவதும், பல கல்லுாரிகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளதால், அவற்றில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேசமயம், முன்னணியில் உள்ள கல்வி நிலையங்களில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம், என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப மையம் ஆகியவற்றில் சேர, ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இவற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்களை விட, மாணவர்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால், பலர் ஏமாற்றமடையும் நிலை காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக