லேபிள்கள்

12.4.18

பிளஸ் 1 மாணவர்களுக்கு, 'நீட்' பயிற்சி : 412 மையங்களில் அனுமதிக்க உத்தரவு

தமிழக அரசின், 'நீட்' தேர்வு இலவச பயிற்சி மையங்களில், பிளஸ் 1 மாணவர்களும் பயிற்சிக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீட் தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு க்கான தேர்வு, மே, 6ல் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியரை தயார் செய்ய, தமிழக அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஜன., மற்றும் பிப்ரவரியில், மாநிலம் முழுவதும், 412 மையங்களில் பயிற்சி நடந்தது. மார்ச்சில் பொது தேர்வு நடந்ததால், பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்ததும், சென்னையில் உள்ள, சில இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உணவு மற்றும் தங்கும் வசதியுடன், நீட் சிறப்பு பயிற்சி, மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 9,000 பேர், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 4,000 பேருக்கு, சிறப்பு உணவு, இருப்பிடத்துடன் கூடிய பயிற்சிகள் தரப்படுகின்றன. மற்றவர்கள், அந்தந்த பகுதி பயிற்சி மையங்களில், பயிற்சி பெறுகின்றனர்.அதேநேரம், அதிகாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு, பயிற்சி மையங்களில் மாணவர் எண்ணிக்கை இல்லை. எனவே, பயிற்சி வகுப்புக்கு, பிளஸ் 1 மாணவர்களையும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெறுகின்றன. எனவே, பிளஸ் 1 மாணவர்களுக்கும், நீட் தேர்வு பயிற்சி அவசியம் தேவை என்பதால், பள்ளிக் கல்வித் துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக