லேபிள்கள்

11.4.18

மாநில திட்ட பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை குறையும் அபாயம் !சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க கல்வி நிறுவனங்கள் ஆர்வம்

மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க தமிழக அரசின் தடையில்லா சான்று பெற கல்வி நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன.
தமிழகத்தில் ஆரம்ப கல்வி முதல் பிளஸ் 2 வரையில் மாநில கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல பிரிவாக இருந்தது.ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாநிலக் கல்வி முறையிலும், வசதி படைத்தவர்கள் மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வந்தனர்.இவர்களில் மாநிலக் கல்வி முறையில் படித்த மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர போதிய வாய்ப்பு கிடைக்காததால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பிரிவில் சேர்க்க ஆர்வம் காட்டியதால் கல்வி வியாபாரமானது. ஒவ்வொரு பள்ளிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலித்தன.இந்த ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. மேலும், பள்ளிகளின் கட்டமைப்பிற்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயித்தது. மெட்ரிக் கல்வி முறையில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் அதிரடி நடவடிக்கையால் பெரும் இழப்பு ஏற்பட்டது.அதனால், தமிழக அரசு தலையீடு இல்லாத வகையில் மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவு பள்ளிகளாக மாற்ற முயற்சித்தனர். ஆனால், பெற்றோர் மத்தியில் பெரிய அளவில் ஆதரவில்லாததால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கப்பட்டன.இந்நிலையில் சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றாலும், ஐ.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகமிக குறைவாகவே உள்ளது.மேலும் மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு தேசிய திறனறி நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வசதியாக தங்கள் பிள்ளளைகளை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் துவங்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பெற்றோர்களின் மனநிலையை அறிந்த கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறந்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற்று மத்திய அரசுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.மேலும், இப்பள்ளிகளில் மாணவர்கள் 8ம் வகுப்பு தேர்விற்கு செல்லும் போது அவசியம் மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்கி வருகின்றன.இதன்காரணமாக கடந்தாண்டுவரை 14 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே இருந்த கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு 33 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பள்ளிகள் மட்டுமே தமிழக அரசின் தடையில்லா சான்று பெற்றுள்ளன. 16 பள்ளிகள் தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தள்ளன.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் புதிதாக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க ஏராளமான கல்வி நிறுவனங்கள் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து வருகின்றன. இதனால், வரும் கல்வி ஆண்டில் மாநில திட்ட பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக