வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2,
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
ஒரு தேர்வு மையத்திற்கு அருகே, புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை வைத்துள்ள அடுத்த, செக்!.பொதுத் தேர்வு எழுதுவதற்கான மையங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும், 50 முதல் 100 வரை அதிகரிக்கின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தங்கள் பள்ளியை, தேர்வு மையமாக அங்கீகாரம் பெறுவதை, மிகவும் முக்கியமாக கருதுகின்றன. ஏனெனில், அப்போது தான், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன், தேர்வு மைய அங்கீகாரம் இருப்பதை, கவுரவமாகவும்
கருதுகின்றனர். ஆனால், சில பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, தேர்வு மையத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றன.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம், தேர்வு முறைகேடுகளில்
ஈடுபட்டதை, அப்போதைய மாவட்ட கலெக்டர், அன்சுல் மிஸ்ரா, கையும், களவுமாக பிடித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டது. இதுபோன்ற பல முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த ஆண்டு, புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு
வந்துள்ளது.
இதுகுறித்து, தேர்வுத் துறை வட்டாரம் கூறியதாவது: ஒரு தேர்வு மையத்திற்கு அருகில், புதிய தேர்வு மையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளோம். இதுபோன்று, அருகருகே, தேர்வு மையங்கள் அமைவது, தேவையற்றது. புதிய தேர்வு மையம் கேட்கும் பள்ளியில், எத்தனை மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்ற விவரத்தை பார்த்து, அந்த மாணவர்களை, ஏற்கனவே பக்கத்தில் உள்ள மையத்திலேயே தேர்வெழுத வைக்க முடியுமா என, ஆய்வு செய்வோம். முடியும் எனில், புதிய தேர்வு மையத்திற்கு, அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது. தேவையில்லாமல், அதிக மையங்களுக்கு அனுமதி வழங்குவது, நடைமுறை ரீதியாக, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தேர்வின்போது, அதிகமான மையங்களை கண்காணிப்பதிலும், சிரமம் ஏற்படும். இதை பயன்படுத்தி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடலாம். இதை எல்லாம் தவிர்க்கவே, இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளோம்.
புதிய மையங்களுக்கு அனுமதி கேட்டு, தற்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்து வருகின்றன. ஒரு பள்ளியில், பிளஸ் 2 வகுப்பில், 150 மாணவர்களும், 10ம் வகுப்பில், 125 மாணவர்களும் தேர்வெழுதினால், அந்த பள்ளிக்கு, தேர்வு மைய அங்கீகாரம் வழங்குவது குறித்து, பரிசீலனை செய்வோம். இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த, 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை மூலம், தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த, செக் வைத்துள்ளது தேர்வுத் துறை. ஏற்கனவே, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் மற்றும் பார்கோடிங் முறை ஆகியவற்றால், தனியார் பள்ளிகள் ஆடிப்போய் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக