தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை அரசு கொண்டு வந்துள்ளது. அதே வேளையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் பணி அமர்த்தப்படும் ஆசிரியர்கள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மாவட்ட கல்வி அதிகாரிகளின் நிபந்தனை அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் 15.11.2011-ம் ஆண்டுக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரத்து செய்ய வேண்டும்
அதுபோன்று நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்றும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 7.11.2013 அன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேனியை சேர்ந்த சுப்பிரமணியசிவா மற்றும் சிவகங்கை இளையான்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஹமீதியா பள்ளி தாளாளர் ஹமீதுதாவூத் உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன்லால், லஜபதிராய், சேவியர்ரஜினி, திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது
இதே போன்று மதுரையை சேர்ந்த புவனேசுவரி, உமா, ராம்சங்கர், பிரேமலதா, நாகராஜன், முருகன், சதீஷ்குமார், தஞ்சாவூர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராகவாச்சாரி, வக்கீல் என்.சதீஷ்பாபு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். பின்னர், வழக்கின் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக