ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டி.இ.டி.,) தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கலாகும் வழக்குகளை கண்காணிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், புதிய கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட, ஒரே கேள்விக்கு, மாறுபட்ட விடைகள் இடம் பெற்றிருந்ததால், தேர்வர்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
வணிகவியல் தேர்வு, 'டி' பிரிவு வினாத்தாளிலும், இதுபோன்ற குழப்பம் நீடித்தது. இதுதவிர, சமீபத்தில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வுகளிலும், உத்தேச, 'கீ ஆன்சரில்' இடம் பெற்ற தவறுகள் திருத்தப்படாமல், முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், 88 மதிப்பெண் பெற்ற பலர், சரியான விடையளித்தும், மதிப்பெண் கிடைக்காததால் தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு எழுதியோர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக, டி.ஆர்.பி., இணை இயக்குனர்கள், இயக்குனர்கள் என, அடுத்தடுத்து மதுரை ஐகோர்ட்டில் ஆஜராயினர். வினாத்தாள் தயாரிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, டி.ஆர்.பி., தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது, டி.ஆர்.பி.,க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்குகள், உடனுக்குடன் டி.ஆர்.பி., கவனத்திற்கு செல்லாததே, அபராதம் வரை சென்றது.
இதன் விளைவாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கண்காணித்து, அவற்றின் விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க, மதுரையில் புதிய கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., யில், மொத்தம், ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், ஒரு பணியிடம், மதுரைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பில், மதுரை கிழக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர், முத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக