லேபிள்கள்

19.11.13

சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் வி.கே.ஜெயக்கொடி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
தமிழகத்தில் உள்ள 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் , பி, சி மற்றும் டி பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு முடிந்தவரை அவர்களது சொந்த ஊர்களிலேயே பணியிடம் வழங்க வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசுப் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது பணியிட மாறுதல் வழங்கும் போதும், பதவி உயர்வு அளிக்கும் போதும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமையில், சொந்த மாவட்டங்களில் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒற்றைச் சாளர முறை கடைபிடிக்கும் போதும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென அரசுத் துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வி.கே.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த உத்தரவால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைக்காக தங்களது உடல் அசெளüகரியங்களை சிரமத்துடன் பொறுத்துக் கொண்டு பணியாற்றவேண்டிய அவலநிலையை அரசின் இந்தச் சலுகையால் போக்கமுடியும் என  நிம்மதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக