லேபிள்கள்

17.11.13

ஸ்மார்ட் கார்டு பணிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை : பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்- நாளிதழ் செய்தி

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, கடந்த மாதத்தில், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.

அதிருப்தி : தற்போது, அனைத்து மாணவர்களின் போட்டோவும், சிடியில் பதிவு செய்து, வழங்க வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை உத்தர வால், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
ஸ்மார்ட் கார்டு தயாரிக்க, ஆன் - லைனில் பதிவேற்றம் செய்யும் வகையில், படிவங்கள் பூர்த்தி செய்ய உத்தரவிட்டனர். இதை, தனியார் பிரவுசிங் சென்டர் மூலமாகவே செய்து முடித்தோம். இதற்கு, ஒரு மாணவருக்கு, 7 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, போட்டோ குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. படிவங்களை பூர்த்தி செய்து, அனுப்பி வைத்த நிலையில், அனைத்து மாணவர்களின் போட்டோவும், சிடியில் பதிவு செய்து அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளனர். ஒரு மாணவனுக்கு, போட்டோ எடுத்து சிடியில் பதிவு செய்ய, 10 ரூபாய் வரை செலவாகிறது. இவை எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

சொந்த பணத்தில் : அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும், எவ்வித நிதியும் இருப்பதில்லை. இதனால், தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து, இந்த செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க, பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம் வசூல் செய்ய துவங்கி விட்டனர். இதனால், தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி விடும் சூழல் உள்ளது. இதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக