லேபிள்கள்

10.1.14

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்

பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புவி தகவல் முறைமை ஆய்வின் மூலம் தமிழகத்தில் 2013-14ம் கல்வியாண்டில் ஒரு கி.மீ, மூன்று கி.மீ தொலைவில் தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் அரசு பஸ் வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங் களை சேர்ந்த பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள 6,145 மாணவர்களுக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது. 

இதில் மலையோர பகுதிகள் மட்டுமின்றி இதர பகுதிகளிலும் குடியிருப்புகள் இருக்கின்ற பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு பள்ளி வசதியோ, அரசு பஸ் வசதியோ இல்லாத நிலை உள்ளது. இங்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அந்த வகையில் ஒரு குழந்தைக்கு ஒரு கல்வியாண் டுக்கு ரூ.3000 என்ற அடிப்படையில் 6,145 குழந்தை களுக்கு ரூ.1 கோடி 84 லட்சத்து 350 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.300 வீதம் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி பெற்ற குழந்தையின் பெற்றோரிடம் இருந்து பயனீட்டு சான்று பெற்று சம்பந்தப்பட்ட கிராம கல்விக்குழு அல்லது பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு காசோலையாக வாகன பயண கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியரின் 75 சதவீத வருகை இதில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.300க்கு மிகாமல் செலவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் இந்த வசதி பெறும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் வாகனத்தை தேர்வு செய்தல், சமுதாய பங்கேற்பு, இந்த வசதி எவ்வாறு அவர்களது குழந்தையை பள்ளி செல்ல ஊக்குவிக்கிறது என்பது போன்றவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக