லேபிள்கள்

10.1.14

சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவிகள் மயக்கம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது மறவர்பெருங்குடி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போத்தம்பட்டி, சுத்தமடம், சலுக்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வெள்ளையாபுரம், மீனாட்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் வளர் இளம் பெண்கள் திட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வாரந்தோறும் வியாழக்கிழமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் நேற்று பிற்பகல் சத்து மாத்திரை சாப்பிட்டனர். 

சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக, அடுத்தடுத்து 12 மாணவிகள் மயங்கிக் கீழே விழுந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் பதறிப்போய் அருகில் உள்ள ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ அதிகாரி தேவிகா தலைமையில் டாக்டர் குழுவினர் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தகவலறிந்த பெற்றோர், பதறியடித்துக் கொண்டு பள்ளி முன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், மயக்கம் தெளிந்த மாணவிகள், பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வளவு பரபரப்பு நடந்தும், மருத்துவத்துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ சம்பவ இடத்திற்கு வரவில்லை. மாணவிகளுக்கு வழங்கப்பட்டது காலாவதி மாத்திரைகளோ என பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

மருத்துவ ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘இரும்புச்சத்து மாத்திரைகளை, உணவுக்குப் பிறகே எடுத்துக் கொள்ளவேண்டும். வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்படும்என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக