லேபிள்கள்

10.1.14

"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் திருத்தம் ஏதுமில்லை எனத் தெரிகிறது.
இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக