லேபிள்கள்

29.9.14

டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது

முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் படிப்புகள் எம்.காம். படிப்புக்கு இணையானதே என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவர பல்கலைக்கழகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னைப் பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டம் சனிக்கிழமை (செப்.27) நடைபெற்றது.

அப்போது உறுப்பினர் பேராசிரியர் வி. ரமேஷ் தீர்மானம் ஒன்றை முன்வைத்து பேசியது:

எம்.காம். பட்டதாரிகளை கல்லூரியில் நிறுவனச் செயலர் (சி.எஸ்.) துறையில் உதவிப் பேராசிரியராக நியமித்துக் கொள்ளலாம் என்பதும், எம்.காம். (நிறுவனச் செயலர்), எம்.சி.எஸ். (முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம்), எம்.ஏ. (நிறுவனச் செயலர்) பட்டங்கள் பெற்றவர்களை வணிகவியல் துறையில் (பி.காம்., எம்.காம்.) உதவிப் பேராசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம் என்பதும் அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியம், ஆட்சிமன்றக் குழு, கல்விக் குழு ஆகியவையும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அண்மையில் நடத்திய கல்லூரி வணிகவியல் துறைக்கான உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகள் தகுதியற்றவர்களாகக் கூறி புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எம்.காம். பட்டதாரிகள் மட்டுமே தகுதியானவர்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் தேர்வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான எம்.சி.எஸ்., எம்.காம். (சி.எஸ்.), எம்.ஏ. (சி.எஸ்.) பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தப் படிப்புகள் அனைத்தும் எம்.காம். முதுநிலை பட்டத்துக்கு இணையானதே என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதே கருத்தை மேலும் சில பேராசிரியர்களும் கல்விக் குழுவில் வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்விக் குழுத் தலைவரும், பல்கலைக்கழகத் துணைவேந்தருமான தாண்டவன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக