மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி, ஆறாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருவாய் சான்றுகள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் நலத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தலுக்கான சான்றிதழ் உள்ளிட்டவை கேட்டு, வருவாய் அலுவலகங்களுக்கு மாணவர்கள் அலைவது குறையும் என கல்வித்துறை தெரிவித்தது.
இதன்படி, எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் கோரி பள்ளிகள் சார்பில் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அளித்து பல மாதங்களாக கிடைக்காத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து கேட்டால், ஏதாவது ஒரு சந்தேகத்தை எழுப்பி அதற்கான ஆதாரம் கேட்டு மனுவை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
ஆனால், பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த அதே மாணவர்கள் சிலர், சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் தனியாக விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்கள் வாங்கி விடுகின்றனர் என தலைமையாசிரியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் சாமிசத்யமூர்த்தி, பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது: தேவைப்படும் மாணவர்கள் விவரம், பெற்றோர் கையொப்பம் உட்பட அனைத்து தகவல்களுடன் விண்ணப்பித்தாலும் சிலர் கிடைக்காத ஆவணங்கள் கேட்டு திருப்பி அனுப்பி, மாணவர்கள், தலைமையாசிரியர்களை சில அதிகாரிகள் பந்தாடுகின்றனர்.
ஒவ்வொரு ஆய்வு கூட்டத்திலும் மூவகை சான்றுகள் கேட்டு எத்தனை மாணவர்களுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள் என கேட்கும் மாவட்ட அதிகாரிகள், கொடுத்த மனுக்களுக்கு எத்தனை சான்றிதழ்கள் வழங்கியுள்ளீர்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்க வேண்டும். அப்போதுதான் சான்றுகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பிறப்பு சான்றிதழ்களும் வழங்க வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக