லேபிள்கள்

2.10.14

மாணவர்களின் வருகை குறைவால் சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்கள் பரிதவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு, பெரும்பாலான மாணவர்கள் வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது, பொதுத்தேர்வு கேள்வித்தாள் பாணியில், நடத்தப்பட்டது. தேர்வுகள், கடந்த முடிவடைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில், காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களும் உள்ளன. எனவே, பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.

இந்த நாட்களில், புதுப்பாடங்கள் நடத்துவதால், பாடத்திட்ட சுமை குறைவதோடு, கடைசி நேர படபடப்பு குறையும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால், தினசரி, காலை, மதியம் இரு பிரிவுகளாக, முக்கிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வகுப்பு துவங்கிய முதல் நாளான, 27ம் தேதியன்று, ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்தது. எனவே, அன்றைய தினத்தில் மட்டுமே, பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்கள் ஆப்சென்ட் இல்லாமல் வகுப்புக்கு வந்துள்ளனர்.

அடுத்த நாள் முதல், மாநகரின் பல்வேறு பகுதிகளில், ஆர்ப்பாட்டம், பந்த், போராட்டம் நடந்ததால், பள்ளிக்கு அருகிலுள்ள மாணவர்கள் மட்டுமே தினசரி வகுப்புக்கு வருகின்றனர். குறைந்தபட்ச மாணவர்களின் வருகையால், சிறப்பு வகுப்புகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் சிலர் கூறுகையில், "காலாண்டு விடுமுறையில், ஐந்து நாட்கள் மட்டுமே, சிறப்பு வகுப்புகளுக்காக திட்டமிடப்பட்டது. மற்ற நாட்களில், அரசு விடுமுறை என்பதால், வகுப்புகள் கிடையாது. இருப்பினும், மாநகர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடப்பதால், சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். ஆப்சென்ட் மாணவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, சிறப்பு வகுப்புகள் திட்டமிட்டபடி நடக்காமல், ஏற்கனவே நடத்திய பாடத்திட்டங்களை படிக்க மட்டும் வைக்க வேண்டியுள்ளது" என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக