லேபிள்கள்

19.11.14

சித்தா உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்களுக்கு நவம்பர் 21-ல் கலந்தாய்வு

சித்தா, யுனானி உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதல் இடங்களுக்குமான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம்-ஹோமியோபதித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 5 அரசு கல்லூரிகளில், 13 காலியிடங்களும், 20 சுய நிதிக் கல்லூரிகளில் 132 காலியிடங்களும் உள்ளன. சென்னை அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 10 இடங்கள் உயர்த்தப்பட்டு அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

எனவே அதனையும் சேர்த்து மொத்தம் 155 இடங்களுக்கு கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள சிலருக்குத் தகுதிகள் கிடையாது. அதன்படி, கடந்த அக்டோபரில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு கொள்ளாதவர்கள், முந்தைய கலந்தாய்விற்கு வந்து, பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விருப்பப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள், தனது சுற்றின்போது அரசு கல்லூரிகளில் இடமிருந்தும் அதனைத் தேர்வு செய்யாமல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதனை எழுத்தால் தெரிவித்து தனியார் சுயநிதி ஆயுஷ் மருத்துவ கல்லூரியினைத் தேர்வு செய்து இட ஒதுக்கீட்டு உத்தரவைப் பெற்றவர்கள் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.

கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்: முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு, அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் மற்ற சுயநிதிக்கல்லூரிகளைத் தேர்வு செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், தனது சுற்றின்போது இட ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று உரிய கல்லூரியில் இணைந்தோர் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.

முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு ரூ.5,500-க்கான வரைவோலை செலுத்தி இட ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று கல்லூரியில் இணைந்தோர் மறுபடியும் கேட்பு வரைவோலை செலுத்த தேவையில்லை. ஆயினும், முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் இந்தக் கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு உத்தரவு பெறும் போது ரூ.5,500-க்கான வரைவோலையை, ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் "இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை 106' என்ற பெயரில் நவம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகு எடுத்ததாக சென்னையில் மாற்றத்தக்கதாக செலுத்த வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக