லேபிள்கள்

16.11.14

பள்ளிகளில் காணாமல் போன 'ஆலோசனை பெட்டி' திட்டம்! மாணவர்கள் வருத்தம்

பள்ளி மாணவர்களின் நலன் கருதி, கடந்த கல்வி யாண்டில் கொண்டு வரப்பட்ட, 'மாணவர்களுக்கான ஆலோசனை பெட்டி' திட்டம், தற்போது செயல்படுவது இல்லை என்பது, மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவ, மாணவியர் தங்களின் குறை, நிறைகள் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும் தெரிவிக்க, குறிப்பாக, பாலியல் வன்கொடுமையிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில், அரசு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க உத்தரவிட்டது.

உடனுக்குடன்...:


இப்பெட்டி, 'மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட வேண்டும்; மாணவர்களின் ஆலோசனைகள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும்; புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்; புகார்களில், மாணவர்கள் தங்கள் பெயர் எழுத கட்டாயப்படுத்தக் கூடாது' போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அரசின் உத்தரவை தொடர்ந்து, சில மாதங்கள் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாணவர்களின் ஆலோசனைகள், புகார்கள், நிறை, குறைகள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டன. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வும் மேற்கொண்டனர். ஆனால், தற்போது இத்திட்டம் பள்ளியில் செயல்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் பெயரளவில், 'ஆலோசனை பெட்டி' தொங்க விடப்பட்டுள்ளது. தேர்வுகளை மையமாக கொண்டு, பாடங்கள் நடத்தி முடிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டு வருவதால், மாணவர்களின் ஆலோசனைகளுக்கு செவி சாய்க்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டுப்பாடம்:


அரசு பள்ளி மாணவர்கள் கூறியதாவது: எங்கள் குறைகளை கேட்க, கடந்த ஆண்டு பள்ளிகளில், 'ஆலோசனை பெட்டி' வைத்தனர். தற்போது, அந்த பெட்டி எங்கே உள்ளது என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு, வீட்டு பாடம் அதிகமாக கொடுப்பது, பிற மாணவர்களுடன் ஒப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் எழுதி அந்த பெட்டியில் போட்டோம். அதை படித்து, அதை சரி செய்தனர். ஆனால், தற்போது, எங்கள் நிறை, குறைகளை கூற எவ்வித வாய்ப்பும் இல்லை. இத்திட்டத்தை மறுபடியும், முறையாக செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக